இந்தியா: தமிழ்நாடு

வேளாண்மை என்பது நிலம் இருப்பவர்கள் மட்டும் பார்க்கும் தொழிலாக இல்லாமல் விரும்பியவர் அனைவரும் பார்க்க முன்வரும் தொழிலாக மாற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்

இந்நிலையில் நிலத்தின் மதிப்பு குறித்தும் வேளாண் தொழில் பற்றியும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருப்பதாவது...

வேளாண்மை என்பது வாழ்க்கையாக - பண்பாடாக இருந்தாலும் அது லாபம் தரும் தொழிலாக முழுமையாக இன்னும் மாறவில்லை. அப்படி அது உயர்த்தப்பட வேண்டும். உழவர்கள் உற்பத்தியாளர்களாக மட்டும் காலமெல்லாம் இருந்துவிடக் கூடாது. அவர்களே விற்பனையாளர்களாக மாற வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்துடன்தான் உழவர் சந்தைகள் உருவாக்கப்பட்டன.

வேளாண்மை என்பது நிலம் இருப்பவர்கள் மட்டும் பார்க்கும் தொழிலாக இல்லாமல் - விரும்பியவர் அனைவரும் பார்க்க முன்வரும் தொழிலாக இது மாற வேண்டும். இன்றைக்கு நிலத்தை விட அதிக மதிப்பு கொண்டது ஏதுமில்லை. அத்தகைய நிலத்தை வைத்திருக்கும் உழவர்களை மகிழ்ச்சிக்குரியவர்களாக மாற்ற வேண்டும்.

உழவர்களுக்கு தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும். அதிகாரிகளுக்கு வேளாண்மை தெரிந்திருக்க வேண்டும். இவை இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்டால் வேளாண்மை என்பது வர்த்தகத் தொழிலாக மாறும். அதற்கு இதுபோன்ற கண்காட்சிகள் அடித்தளம் அமைக்கும்.

இதுபோன்ற கண்காட்சிகளைத் தொடர்ந்து நடத்துங்கள். அனைத்து மாவட்டங்களுக்கும் எடுத்துச் செல்லுங்கள். வேளாண் அறிவு என்பது உழவர்களுக்கு மட்டுமல்ல, மற்ற அனைவரும் பெற்றாக வேண்டும்.' இவ்வாறு அவர் தெரிவித்தார்.