இந்தியா: தமிழ்நாடு

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில சிறப்புப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ரம்யா வேணுகோபால் மக்கள் நீதி மய்யம் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களைக் கூறி கட்சியில் இருந்து வெளியேறி உள்ளார்.

ரம்யா வேணுகோபால், கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மநீம சார்பாக மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டவர்.

இந்நிலையில் மநீம கட்சியில் இருந்து தீடீரென விலகியுள்ள இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது...

எங்கள் பாதைகள் இப்போது வேறுபட்டுவிட்டன. கனத்த இதயத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சி உடனான எனது பயணத்தின் முடிவை அறிவிக்கிறேன்.

இங்கு நான் இருந்த காலம் முழுவதும், எங்கள் அன்புக்குரிய கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து மக்களுக்காகப் போராடினேன்.

ஊழல் நபர்களால் மக்கள் நீதி மய்யம் கட்சி பாதிக்கப்பட்டுள்ளது. ஊழல் நிர்வாகிகள் கொசுக்களைப் போல எங்கும் பரவி இருக்கின்றனர்.

அவர்கள் தனியாக கட்சிக்கு சேதத்தை ஏற்படுத்த முடியாது என்றாலும், அவர்கள் ஒட்டுமொத்தமாக இணைந்து செலுத்தும் வைரஸ் இந்தக் கட்சியை மோசமாக்குகிறது.

கட்சியின் தலைவர் கமல்ஹாசனைத் தவிர வேறு யாரும் தலைவர்கள் போல் செயல்படவில்லை. தந்திரமான நபர்களால் அவர் தவறாக வழிநடத்தப்படுகிறார். பலர் ஒன்று சேர்ந்து ஏமாற்றும்போது என்னைப் போன்ற தனிநபர்கள் இவ்வளவுதான் செய்ய முடியும். அதனால் கனத்த இதயத்துடன் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெளியேறுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.