இந்தியா: தமிழ்நாடு

இன்று (28) 'என் மண் என் மக்கள்' என்ற கோஷத்துடன் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடைபயணத்தை தொடங்க உள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

இந்த பயணத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார் இதற்காக நேற்றையதினம் ‌மதியம் அண்ணாமலை மதுரைக்கு வந்தார்.

மதுரை விமான நிலையத்தில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் நான்குவழிச்சாலையில் உள்ள டெம்பிள் சிட்டி ஓட்டலில் அவருக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டி இருந்தது.

ஆனால் இதுகுறித்து அவருக்கு கட்சி நிர்வாகிகள் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே ஓட்டல் முன்பு கட்சி கொடிகளுடன் காத்திருந்தவர்களை பார்த்துள்ளார். தன் வாகனத்தை நிறுத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனக்கருதி அவர்களுக்கு 'சைகை' காட்டிவிட்டு திருப்புவனத்தை தாண்டிச் சென்றுவிட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட பாஜக நிர்வாகிகள், மதிய உணவு குறித்து அவருக்கு தெரிவித்தனர். உடனடியாக ஓட்டல் உரிமையாளர் குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அண்ணாமலை, 'ஸாரி அண்ணா. ஓட்டல் முன்பு கூட்டம் இருந்ததால் கடந்து சென்றுவிட்டேன். உடனடியாக 'U' டர்ன் செய்து ஓட்டலுக்கு வரமுடியவில்லை. அடுத்தமுறை கட்டாயம் வருகிறேன்' என்று தெரிவித்தார்.

இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.