மலேசியாவில் உள்ள மலாயா பல்கலை வளாகத்தில் 11 வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 21 22 , 23 திகதிகளில் இடம்பெற்றது.

இந்நிலையில் ஜூலை 21 ஆம் திகதி நடந்த முதல் நாள் மாநாட்டில் தமிழக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மலேசிய அமைச்சர் சரஸ்வதி, மலேசிய இந்திய காங்கிரஸ் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த மாநாட்டில் தொல் திருமாவளவன் அவர்கள் பேசியதாவது...

மத அடையாளத்தை விட மொழி வழி தேசிய இன அடையாளம் பாதுகாப்பானது.

இந்தியாவில் பிரிவினைவாத அரசியல் நடக்கிறது. மதவழி தேசியத்தால் நாடு வலிமை பெறாது. தமிழர் இப்போது பின்பற்றும் ஆண்டுகள், மாதங்கள், வாரங்கள், கிழமைகள், பண்டிகைகள் எதுவும் தமிழர்களுடையது அல்ல தமிழகத்தில் மதமற்ற பண்டிகைகள் தான் இருந்தன. ஆனால் இப்போது தமிழர்களின் பண்டிகைகளில் மதம் ஆதிக்கம் செலுத்துகிறது.

தமிழர்களின் கலாசாரத்தை இழந்து நிற்கிறோம். வெறும் மொழியும் இனமும் மட்டுமே எஞ்சி நிற்கிறது. இழந்த கலாசாரத்தை மீட்டெடுக்கவே தமிழ் தேசியத்தை முன் வைக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிலையில் திருமாவளவன் பேசிக் கொண்டிருக்கும் போதே , அரங்கில் இருந்த தமிழர்கள் பலர் எழுந்து நின்று உரத்த குரலில் எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.

இதனிடையே திருமாவளவனின் இந்த உரைக்கு மலேசிய துணை அமைச்சர் சரஸ்வதி கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியதாவது..

ஒரு மொழியை எவ்வாறு நாங்கள் கண்ணாக பாவிக்கின்றோமோ, அதேபோல் ஒரு சமயத்தையும் நாங்கள் ஒரு கண்ணாக பாவிக்கின்றோம் அந்த ஒரு சமயத்தை குறிவைத்து கடல் தாண்டி மலேசியாவிற்கு வந்து அதில் வேற்றுமை இருப்பதாக கூறுவதை ஒரு காலமும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார்.

மற்றும் இது அவரது அரசியல் சித்தாந்தம் என கூறும் அவர், அவருடைய கட்சி சார்ந்த அரசியல் சித்தாந்தத்தை ஒரு தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் தமிழ் தேசிய வாதத்தை முன்னெடுக்க முன்னெடுப்பதற்கு ஆதரவு தெரிவித்த அவர் தமிழ் தேசிய வாதம் என்பது தமிழை வளர்ப்பதற்கான ஒன்றாக இருக்க வேண்டுமே அன்றி பிரிவினை வாதத்தையோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமயத்தை நோக்கி எதிர்ப்பை  இருக்கக் கூடாது என தெரிவித்தார்.

மேலும் சாதி வேறுபாடுகளை களைய வேண்டும் என்பதில் தனக்கு எந்தவித மாற்று கருத்தும் இல்லை என தெரிவித்த அவர் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை எடுத்துக்காட்டி இதுதான் சாதி வேறுபாட்டிற்கு காரணம் எனக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.