இந்தியா: தமிழ்நாடு

மணிப்பூரில் 2 மாதங்களுக்கு முன் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் 19 வயது பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் கூறியிருப்பதாவது..

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் உயிர்போகும் என்ற அச்ச உணர்வு வரும் வகையில் அரசியலமைப்பு சட்டம் கடுமையாக்கப்பட்டு சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் அகில இந்திய கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில், மனிதத்தன்மையற்ற மிக மிக கொடூரமான செயல், மிகுந்த அதிர்ச்சியும், தீராத மனவேதனையும் அளித்துள்ள இச்சம்பவம் நடந்தேறி 77 நாட்களுக்கு பிறகு வெளி உலகம் அறிய முடிகிறது என்பது அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. பெண்கள் உயிர் மற்றும் தன்மானத்தை துச்சமாக கருதி அவமதிக்கும் இது போன்ற இழிநிலை சம்பவங்களை இனியும் வேடிக்கை பார்க்க கூடாது.

உலக அமைதியை வலியுறுத்தி பேசும் இந்தியா, தனக்குள் அடங்கிய மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களாக கலவரம் நடந்த போது, அமைதியான சூழல் உருவாக தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால் தேசமெங்கும் அமைதியற்ற நிலை உருவாகும்.

ஜனநாயக நாடு என்பதற்காக சுதந்திரத்தை தன் கையிலேந்தி, குற்றச்செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை கடுமையாக தண்டிப்பது யார்? மதித்து போற்ற வேண்டிய பெண்களை கூட்டு பாலியல் செய்த சம்பவ இடத்தில் கூடி இருந்த அனைவரும் பாரபட்சமின்றி குற்றவாளியாக கருதப்பட்டு, இனி இது போன்ற சம்பவத்தில் ஈடுபடாத வகையில் உச்சபட்ச தண்டனை விதித்திட வேண்டும்.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டால் உயிர் போகும் என்ற அச்ச உணர்வு வரும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் கடுமையாக்கப்பட்டு சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

உச்சநீதிமன்றமும், பிரதமர் மோடி அவர்களும் அளித்த உறுதியின்படி பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு உரிய நீதியை பெற்றுத்தந்து, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென கோரிக்கையை முன்வைக்கிறேன்" என்று சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.