இந்தியா: தமிழ்நாடு

மணிப்பூரில் 2 மாதங்களுக்கு முன் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏஎம் ஜெயின் கல்லூரி மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் இறங்கி  இன்று ரயிலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை கடற்கரையிலிருந்து அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலை மறித்த அவர்கள், தண்டவாளத்தில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மணிப்பூர் கலவரத்த்தில் பெண்களுக்கு ஏற்பட்ட நிகழ்வுகளை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும் உடனடியாக கலவரத்தை நிறுத்த பிரதமர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பி மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் தண்டவாளத்தில் ஆங்காங்கே சுமார் 20 நிமிடம் நிறுத்தப்பட்டன. இதனால் ரயில் சேவை பாதிப்படைந்தது.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார் மற்றும் மீனம்பாக்கம் காவல் துறையினர் விரைந்து சென்று தண்டவளத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அப்புறப்படுத்தினர்.

இதையடுத்து சுமார் 20 நிமிடத்திற்கு பிறகு மின்சார ரயில்கள் வழக்கம் போல் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மார்க்கத்தில் இயக்கப்பட்டன.