இந்தியா: தமிழ்நாடு

கடந்த இரண்டரை மாதங்களாக மணிப்பூரில் உள்ள மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை மோதல்கள் நிலவி வரும் நிலையில், இரண்டு மணிப்பூர் பெண்களை கூட்டு பலாத்காரம் செய்து நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான வீடியோ புதன்கிழமை வெளியானது.

அந்த வீடியோவில் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்றவர்களில் இருந்த இரண்டு நபர்களை மணிப்பூர் போலீசார் கைது செய்துள்ளதாக அந்த மாநில முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோவில் காணப்பட்ட முக்கிய நபர்களான இருவர் நேற்று (20) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோவை உறுதி செய்த மணிப்பூர் காவல்துறை, தௌபல் மாவட்டத்தில் மே மாதம் 4ஆம் தேதி இந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறியுள்ளனர்.

இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவம் பலரையும் கொதித்தெழச் செய்தது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன்  அவரது ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது..

மதத்தின் பெயரால் அரங்கேறியுள்ள மணிப்பூர் பேரவலம் இந்திய தேசத்திற்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் பாஜகவைத் தனிமைப்படுத்தி வீழ்த்த வேண்டும் என்பதற்கு பற்றி எரியும் மணிப்பூரே சாட்சியமளிக்கிறது. பழங்குடி சமூகப் பெண்மணிகளை நிர்வாணப்படுத்தி பொதுவெளியில் நடத்தி இழிவுப்படுத்தியதோடு கூட்டு வல்லுறவு செய்த அந்தக் கொடிய மனித விலங்குகளைச் சிறைப்படுத வேண்டும். விரைந்து விசாரித்துத் தண்டிக்க வேண்டும்.

இந்தியாவை உலக அரங்கில் தலைகுனிய வைத்துள்ள இந்தக் கொடிய அநாகரிகத்துக்குப் பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும். உடனடியாக மணிப்பூர் அரசைக் கலைத்து அம்மாநில முதல்வரையும் கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.