இந்தியா: தமிழ்நாடு

சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லை பகுதியில், பாமகவின் 35ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாமக தலைவரும் ராஜ்யசபா எம்.பியுமான அன்புமணி ராமதாஸ், அண்ணாவின் மதுவிலக்கு கொள்கையை பாமகதான் பின்பற்றுகிறது எனப் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், "நம் எதிரிகள் நம் மீது பொறாமை கொண்டு, எப்படியாவது நமக்கு அவப்பெயர் ஏற்படுத வேண்டும் என்ற நோக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சி ஒரு சாதிக்கட்சி என்ற கருத்தை திணிக்கின்றனர். ஊடக சந்திப்பில் யாராவது ஒருவர் இப்படி கொளுத்திப் போடுகிறார்கள். இதையெல்லாம் நிறைய பார்த்துவிட்டோம்.

பாட்டாளி மக்கள் கட்சி எல்லா சமுதாயத்திற்கும், எல்லா மதத்திற்கும், எல்லா சாதிகளுக்கும், எல்லா இனத்திற்கும், எல்லா மொழிகளைச் சார்ந்தவர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் கட்சி. இந்தியாவிற்கே கொண்டு வந்த ஆம்புலன்ஸ் திட்டம், புகையிலை ஒழிப்பு இவையெல்லாம் சாதி பிரச்சனையா?" எனக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அன்புமணி, "சாதி என்று சொன்னாலே ஏதோ கெட்டவார்த்தை போல பார்க்கிறார்கள். சாதியில் என்ன கெட்டவார்த்தை இருக்கிறது? சாதி என்பது ஒரு அழகிய சொல். சாதியில் பிரச்சனைகள் இருப்பதை களையெடுக்க வேண்டும். சாதியால் வரும் அடக்குமுறைகளை விரட்ட வேண்டும். ஒழிக்க வேண்டும். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே நேரத்தில் சாதியில் அழகான வழிமுறைகள் இருக்கிறது, பழக்க வழக்கங்கள் இருக்கிறது. மதத்தில் எவ்வளவோ நல்ல பழக்க வழக்கங்கள் இருக்கிறது. இதையெல்லாம் நாம் கடைபிடிக்க வேண்டும். இதையெல்லாம் நாம் பெருமையாகப் பார்க்க வேண்டும்.

ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் இழிவானவன் கிடையாது. அனைத்து மக்களும் சமம் என்ற நிலை வர வேண்டும். அதற்காகத்தான் பாமக போராடுகிறது. சாதியை ஒழிக்க முடியாது. சாதியையும் மதங்களையும் பெருமையாக பார்க்க வேண்டும். அதில் பல நல்ல விஷயங்கள் உள்ளன." என்றார்.