இந்தியா: தமிழ்நாடு

தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்த வருகின்றன. அந்த வகையில் தேசிய தலைவர்கள் பங்கேற்கும் இரண்டாவது கூட்டம் இன்று பெங்களூரில் நடைபெறுகிறது. இதில் திமுகவும் பங்கெடுக்கிறது. இந்நிலையில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை, "ஆளுநரின் கருத்துகளுக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி செயல்பட்டு வருவதால் மத்திய அரசு இப்படியான பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதனை தமிழக மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இதற்கு 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு தக்க பரிசு கிடைக்கும்" என்று கூறியுள்ளார்.