இந்தியா: தமிழ்நாடு

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி சென்னை மற்றும் விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடுகள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பெங்களூரில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவைத் தடுக்க மத்திய பாஜக அரசு அமலாக்கத்துறையை ஏவியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் பெங்களூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி மீதான அமலாக்கத்துறை ரெய்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் கூட்டம் பாஜகவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. வட மாநிலங்களில் செய்தது போல, தமிழ்நாட்டிலும் அமலாக்கத்துறை மூலம் பாஜக வேலையைக் காட்டத் தொடங்கி உள்ளது என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்கள், அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு நடப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் துரைமுருகன், பொன்முடி வீட்டில் ரெய்டு நடக்கிறதா?; எனக்குத் தெரியாது.. சோதனை நடத்துபவர்களைத்தான் கேட்க வேண்டும். முயற்சி செய்கிறேன்.. அவர்களைத் தான் கேட்க வேண்டும். பார்க்கலாம் என்ன நடக்குதோ நடக்கட்டும். எல்லாம் அரசியல் தானே என பதில் அளித்தார்.

தொடர்ந்து, இந்து பழிவாங்கும் நடவடிக்கை என நினைக்கிறீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.. இருட்டினில் நீதி மறையட்டுமே.." என்ற எம்ஜிஆர் பாடலை பாடிவிட்டு கிளம்பினார் அமைச்சர் துரைமுருகன்.