கடந்த ஜூன் 28 ஆம் திகதி ஐரோப்பிய நாடான சுவீடனில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர். அப்போது மசூதி முன் வந்த நபர் ஒருவர் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை காலில் போட்டு மிதித்து தீயிட்டு எரித்தார். இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றே அவர் இவ்வாறு செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதற்கு பல்வேறு நாடுகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக அரபு நாடுகள் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டங்களை பதிவு செய்தன.

இந்த நிலையில் சுவீடனில் கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளையும், யூதர்களின் புனித நூலான் ஹீப்ரூ பைபிள் எனப்படும் தவ்ராவையும் ஸ்டாக்ஹோமில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பாக எரிக்க சுவீடனை சேர்ந்த அஹமது அல்லுஷ் என்ற 32 வயது காவல்துறையிடம் அனுமதி கேட்டார். இதற்கு சுவீடன் காவல்துறை அனுமதி வழங்கியது.

இந்த தகவல் வெளியாகி சுவீடன் மட்டுமின்றி ஐரோப்பா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிறிஸ்துவ மற்றும் யூத மக்கள் சுவீடன் போலீசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.

குறிப்பாக இஸ்ரேல் நாட்டின் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் புனித நூல்களை எரிக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் யூத பைபிள் மற்றும் கிறிஸ்துவ பைபிளுடன் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள இஸ்ரேல் தூதரகத்துக்கு முன்பாக அஹமது அல்லுஷ் என்ற இளைஞர் வருகை தந்தார்.

ஸ்வீடன் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளும், இஸ்ரேலும் கொதித்துப்போய் இருந்த நிலையில் அவரது செயலை காண ஏராளமான ஊடகங்களும், பொதுமக்களும் அங்கு திரண்டு இருந்தனர். அப்போதுதான் அந்த இளைஞர் ஒரு பெரிய அதிர்ச்சியை அங்கு திரண்டு இருந்த அனைவருக்கும் கொடுத்தார்.

ஆம், தான் யூத மற்றும் கிறிஸ்துவ மக்களின் புனித வேதங்களை எரிக்கப்போவதில்லை என அவர் அறிவித்தார். அங்கு திரண்டு இருந்த செய்தியாளர்களிடம் பேசிய அஹமது அல்லுஷ், "எந்த ஒரு புனித நூலையும் எரிக்கக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பினேன். அதற்காகவே இவ்வாறு செய்தேன்.

நான் ஒரு முஸ்லீம், என்னால் புனித மற்றும் மத வேதங்களை எரிக்க முடியாது. கருத்துச் சுதந்திரத்துக்கும், இனக் குழுக்களை இழிவு படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. குர்ஆன் மற்றும் பிற மத நூல்களை எரிக்கும் செயலை வெறுக்கத்தக்க குற்றமாக கருத வேண்டும்.

இது கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கிலேயே யூத, கிறிஸ்துவ வேத நூல்களை எரிக்கும் செயலுக்கு போலீசாரிடம் அனுமதி பெற்றேன். அவற்றை எரிக்கும் நோக்கம் எனக்கு இல்லை." என்றார்.

அஹமது அல்லுஷின் இந்த செயலுக்கு உலகளவில் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.