இந்தியா: தமிழ்நாடு

கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன்.

பின்னர் அரசியல் பணிகளை குறைத்துக்கொண்டு சினிமாவில் கவனம் செலுத்தி வந்த கமல்ஹாசன், மீண்டும் அரசியல் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார்.

இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், 2021 சட்டமன்ற தேர்தலின் போது தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என மக்கள் நீதி மய்யம் குற்றம்சாட்டியுள்ளது. கோவை தெற்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனை கண்டித்து இன்று உக்கடம் வள்ளியம்மை பேக்கரி அருகில் மநீம சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

வானதி சீனிவாசன் மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் தங்கவேலு தலைமையில் நடைபெறும் இந்த அர்ப்பாட்டத்தில் மநீம மாநில இளைஞரணி செயலாளர் கவிஞர் சினேகன் கண்டன உரையாற்றுகிறார். மநீம மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது 'வானதிக்கு லாபம்.. மக்களுக்கு நாமம்' என்றும், கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளைக் குறிப்பிட்டு, அவை எங்கே என்றும் கேள்வி எழுப்பும் வகையில் பதாகைகளை ஏந்தி இருந்தனர். இதையொட்டி, #வானதிஇங்கே_வாக்குறுதி எங்கே என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர், வானதி சீனிவாசன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பதிவிட்டு வருகின்றனர்.