இந்தியா, பாகிஸ்தான் என்று இரு நாடுகளுமே பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து தான் சுதந்திரம் பெற்றன. இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் திகதி சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் பாகிஸ்தானில் ஒரு நாள் முன்னதாக ஆகஸ்ட் 14ஆம் திகதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டம் அளவுக்கு பாக்கிஸ்தான் கொண்டாட்டம் உலக அளவில் கவனம் பெறாது.

இந்தாண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் அந்த நிலையை ஓரளவுக்காவது மாற்ற வேண்டும் என்று நினைக்கும் பாகிஸ்தான் சுதந்திர தினத்தன்று 500 அடி தேசியக் கொடியை ஏற்ற முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கொடி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லிபர்ட்டி சவுக்கில் ஆகஸ்ட் 14ஆம்

திகதி ஏற்றப்பட உள்ளது.

இந்த ஒரு கொடிக்காகப் பாகிஸ்தான் சுமார் 40 கோடி ரூபாய் செலவழிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் பல ஆண்டுகளாகவே கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இப்போது பாகிஸ்தான் 2000 கோடி ரூபாய் கடன் பிரச்சினையில் சிக்கி தவித்து வருகிறது.

சமீபத்தில் தான் நிலைமையைச் சமாளிக்கச் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெற்றது பாகிஸ்தான்.

ஆனாலும், இந்தியாவுடன் போட்டிப் போட வேண்டும் என்று இப்போது இந்த பிரம்மாண்ட கொடியை ஏற்ற உள்ளனர்.

இந்த சுதந்திர தினத்தில் அட்டாரி எல்லையில் 413 அடி உயரக் கொடியை ஏற்ற இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்தச் சூழலில் தான் பாகிஸ்தான் 500 அடி கொடியை ஏற்ற முடிவு செய்துள்ளது. அதேநேரம் இரு நாடுகளுக்கும் இடையே இப்படி 'கொடிப் போர்' நடப்பது இது முதல்முறை இல்லை.

சுதந்திர கொண்டாட்டத்தில் கொடி ஏற்றுவது தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாகப் போட்டி நிலவி வருகிறது. கடந்த 2017ஆம் ஆண்டில், அட்டாரி-வாகா எல்லையில் இந்திய 360 அடி மூவர்ணக் கொடியை நிறுவிய உடனேயே 400 அடி கொடியை நிறுவப் பாகிஸ்தான் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.