இந்தியா: தமிழ்நாடு

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக ரூபாய் 81 கோடி செலவில் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் கடலில் 134 அடிக்கு பிரமாண்டமான பேனா சிலை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்ததது.

இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது திடீரென இந்த திட்டத்தை அரசு திரும்ப பெற உள்ளதாக ஒரு தகவல் தீவிரமாகப் பரவியது.

ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நமது ஒன் இந்தியா சார்பாக விசாரித்தபோது, இது வரை அப்படி எந்த உத்தரவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. இது பொய்யான செய்தி என்று தெரிவித்துள்ளனர். அதேபோல, செய்தித்துறையினரும், அரசு தரப்பில் இருந்து பேனா நினைவு சின்னம் திரும்பப் பெறப்படுவதாக எந்த ஆணையும் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கருணாநிதி நினைவாக பேனா சிலை அமைப்பதை கடுமையாக எதிர்த்துப் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக பேசிய ஜெயக்குமார், "ஊரெல்லாம் ஒரே விஷயம் தான் நடக்கிறது. எங்கு பார்த்தாலும் கருணாநிதி சிலை, பெயர் சூட்டலாகவே இருக்கிறது. கருணாநிதி புகழ்பாடும் அரசாக திமுக அரசு இருக்கிறது. மக்கள் முகம் சுழிக்கிறார்கள். மதுரையில் நூலகம் திறந்துள்ளது நல்ல விஷயம். அதற்கு ஏன் அவரது அப்பா பெயரை சூட்டினார்? அரசுப் பணத்தை எடுத்து அப்பா பெயர் வைப்பதா? கடலில் 81 கோடி ரூபாயை கொட்டுவது வீண். தண்ட செலவு. பேனா சிலையை திமுகவின் சொந்த செலவில் அண்ணா அறிவாலயத்தில் வைத்து கொள்ளட்டும். அரசாங்க செலவில் பல கோடிகளை செலவு செய்து கருணாநிதிக்கு சிலை வைத்து மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கெடுக்க வேண்டாம். உச்ச நீதிமன்றத்தில் பேனா சின்னம் அமைப்பதற்கு எதிராக அதிமுக சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளோம்" எனத் தெரிவித்தார்