இந்தியா: தமிழ்நாடு

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் இளித்துரை ராமச்சந்திரன். ஆய்வுக் கூட்டங்களாக இருந்தாலும் சரி, கள ஆய்வாக இருந்தாலும் சரி அதிகாரிகள் சொல்வதை கேட்டுக்கொண்டு மேற்கொண்டு அதிர்ந்து கூட பேசமாட்டார்.

அப்படிப்பட்ட அமைச்சர் ராமச்சந்திரனையே கோபப்படுத்திய நிகழ்வு தான் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடைபெற்றது. ஏற்காடு படகு இல்லம், ரோஜா பூங்கா, உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்த போது, குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தது. அதேபோல் ரோஜா தோட்டமும் உரிய பராமரிப்பின்றி இருந்தது. இதைக்கண்டு தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை அழைத்த அவர், தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

இரண்டு நாட்களில் தாம் கூறிய பணிகள் அனைத்தையும் முடிக்க வேண்டும் எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அமைச்சர் ராமச்சந்திரனின் ஏற்காடு ஆய்வு குறித்து குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் அவருடன் சேலம் மாவட்ட திமுக முக்கியப் பிரமுகர்கள் யாரும் ஏற்காடு செல்லவில்லை. இதே பலம்வாய்ந்த துறைகளை கையில் வைத்திருக்கும் அமைச்சர்கள் ஆய்வுக்கு சென்றிருந்தால் சேலம் மாவட்ட திமுக பிரமுகர்கள் போட்டி போட்டுக் கொண்டு கூடவே சென்றிருப்பார்கள்.