இந்தியா: தமிழ்நாடு

காமராஜர் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் கூட, இன்றைக்கும் அவர் பெயரைச் சொல்லாமல் யாரும் ஓட்டுக் கேட்க முடியாது என அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார். முதலமைச்சராக இருந்தும் அவர் மீது யாரும் எந்தக் குற்றச்சாட்டும் முன் வைக்க முடியாதபடி வாழ்ந்து மறைந்த அப்பழுக்கற்ற தலைவர் காமராஜர் என அமைச்சர் நேரு தெரிவித்தார்.

காமராஜர் பெயரைச் சொல்லாமல் ஓட்டுக் கேட்க முடியாத நிலை இருப்பதாக முதலில் கூறிய அமைச்சர் நேரு, என்ன நினைத்தாரோ தெரியவில்லை பிறகு அந்த லிஸ்டில் பெரியார், அண்ணாவையும் சேர்த்துக் கொண்டார். காமராஜரின் கடைசிக்காலத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது அவரிடம் ஆலோசனை கேட்டு செயல்பட்டார் என நேரு தெரிவித்துள்ளார். தன்னை பொறுத்தவரை காமராஜரின் பிறந்தநாள் விழாவில் ஆண்டுதோறும் பங்கேற்பதை பெருமையாக கருதுவதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை அடுத்தக்கட்டத்துக்கு வளர்த்தெடுத்த தலைவர்களில் காமராஜர் பிரதானமானவர் என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். அமைச்சர் கே.என்.நேரு பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் அவரது தந்தை நாராயணன் காங்கிரஸ் அபிமானி என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தான் ஜவஹர்லால் நேரு நினைவாக மகனுக்கு நேரு என பெயர் சூட்டினார் நாராயணன். காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நேரு, ஒரு கட்டத்தில் சொந்த விருப்பத்தின் பேரில் திமுகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.