இந்தியா: தமிழ்நாடு

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14 ஆம் திகதி திமுக பைல்ஸ் என்ற பெயரில் திமுக அமைச்சர்கள், எம்பி, பிரமுகர்கள் என 12 பேரின் சொத்து பட்டியல் குறித்த விபரங்களை வெளியிட்டார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அண்ணாமலை உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டுள்ளார் எனவும் அவர் மன்னிப்பு கோர வேண்டும் இல்லாவிட்டால் அவர்மீது வழக்கு தொடரப்படும் என நோட்டீஸ் அனுப்பினர். இதனிடையே திமுக பொருளாளரும், எம்பியுமான டிஆர்பாலு, அண்ணாமலை மீது சென்னை சைதாப்பேட்டை 18 வது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணைக்காக அண்ணாமலை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறுகையில், "ஊழலுக்கு எதிரான பாஜகவின் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கிச் சென்றுள்ளது. எங்கள் போராட்டம் தொடர்ந்து நடக்கும். ஆகஸ்ட் 24ஆம் திகதி மறுபடியும் இங்கு ஆஜராவோம். டிஆர் பாலுவின் குடும்பத்தினரையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் எனக் கோருவோம். டிஆர் பாலு உட்பட அனைவரும் கூண்டில் ஏற வேண்டும்.

எங்களை நோக்கி முன்வைக்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்வோம். நாங்கள் எந்த அமைச்சரையும் போல நள்ளிரவில் நெஞ்சு வலி என்று கூறி மருத்துவமனையில் சேர மாட்டோம். எல்லா நாளும் நான் இங்கு இருப்பேன். தமிழ்நாட்டில் முதல் தலைமுறைக்கும் மூன்றாம் தலைமுறைக்கும் யுத்தம் நடைபெறுகிறது. அவர்களிடம் பண பலம், அதிகார பலம் இருக்கிறது. எங்களிடம் ஒன்றும் இல்லை, மக்கள் சக்தி மட்டும் தான் துணை. ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்" என அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும், பாதயாத்திரைக்கு முன்பு DMK Files பாகம் 2 வெளியாகும். பார்ட் 2ல் பினாமிகள் பெயரே 300 பேருக்கு மேல் வருகிறது. பினாமிகளின் பெயர்களை பொதுவெளியில் வெளியிடுவதா அல்லது ஆளுநரிடம் கொடுப்பதா என ஆலோசித்து வருகிறோம்

DMK Files Part 2-வில் அதிமுகவில் இருந்து சென்ற திமுக அமைச்சர்கள் தான் அதிகம். பாதயாத்திரையின்போது dmk files பாகம்3, பாகம் 4 என அடுத்தடுத்து வெளியிடப்படும் என அண்ணாமலை தெரிவித்தார்.