இந்தியா: தமிழ்நாடு

தக்காளி விலை அதிகரித்துவரும் நிலையில், பா.ஜ.க மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வெளியிட்டிருக்கிறார். அதில், ``திடீர் மழை, விளைச்சல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மக்கள் அதிகம் பயன்படுத்தும் தக்காளி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கின்றன. இதனால், தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இதைச் சமாளிக்க முடியாத தி.மு.க அரசு, வழக்கம்போல மத்திய அரசுமீது பழிபோட்டுத் தப்பிக்கப் பார்க்கிறது. மக்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய தி.மு.க அரசு, ஊழல் வழக்கில் கைதாகி மருத்துவமனையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காப்பாற்றுவது பற்றிதான் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறது.

தமிழக மக்கள் அதிகம் பயன்படுத்தும் அரிசி, துவரம் பருப்பு, தக்காளி போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கு மற்ற மாநிலங்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையை நோக்கி தமிழகம் சென்றுகொண்டிருக்கிறது. தக்காளி, வெங்காயம், காய்கறிகள் போன்ற அழுகும் பொருள்களின் விலை ஓராண்டு சரிந்தால், அடுத்த ஆண்டு அதைப் பயிரிடுவதைப் பல விவசாயிகள் தவிர்த்துவிடுகிறார்கள். மழைக்காலம் அல்லாத காலங்களில் திடீர் திடீரென பெய்யும் மழையும் பயிர்களை அழித்துவிடுகிறது. விலை உயர்வுக்கு இதுவும் காரணம். இவற்றைத் தவிர்க்க தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் எல்லா காலங்களிலும் சீரான விலையில் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்திருக்கிறார்.