இந்தியா: தமிழ்நாடு

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவையில் உள்ள தனது வீட்டில் டிஐஜி விஜயகுமார் தமது கை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய பொலிஸார்  பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

விஜயகுமார் 2009-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று காவல்துறையில் இணைந்தார். இவர் காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் சென்னை சி.பி.சி.ஐ.டி., திருவாரூரில் மாவட்ட எஸ்.பி. யாக பணியாற்றியவர். பின்னர் சென்னை அண்ணாநகர் துணை ஆணையராக பணியாற்றிய நிலையில் கோவை டிஐஜியாக பதவி உயர்வு பெற்று கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் சாலை முகாம் அலுவலகத்தில் இன்று டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கோவை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்  கூறியிருப்பதாவது பதிவிட்டுள்ளதாவது: கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. விஜயகுமார் இ.கா.ப., அவர்கள் இன்று அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். திரு. விஜயகுமார் அவர்கள் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும்.

அவருடைய குடும்பத்தாருக்கும் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.