இந்தியா: தமிழ்நாடு

லோக்சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் இதற்கான முன் முயற்சிகளை எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து பீகார் தலைநகர் பாட்னாவில் 17 எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாடம் 23 ஆம் திகதி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 6 மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் இந்த கூட்டம் காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவின் பெங்களூருக்கு மாற்றப்பட்டது. பெங்களூரில் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வரும் 17,18 திகதிகளில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க திமுகவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசிக தலைவர் தொல்.திருமாவளவனுக்கு காங்கிரஸ் கமிட்டி அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் அனுப்பி உள்ளார். இதனால் இந்த அழைப்பை ஏற்று பெங்களூர் அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திருமாவளவனும் பங்கேற்கக் கூடும் என தெரிகிறது.

பாட்னா கூட்டத்தில் பங்கேற்ற ஆம் ஆத்மி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கடும் கருத்து வேறுபாடுகள் வெடித்துள்ளன. ஆம் ஆத்மி கட்சியை காங்கிரஸ் பாஜகவின் பி டீம் என பகிரங்கமாக விமர்சித்து வருகிறது. இதனால் பெங்களூர் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்குமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது