சீனா அடிக்கடி சீனா புதிய புதிய விடயங்களை கண்டுபிடித்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது சீனாவில் ‛வாடகை அப்பா' என்ற பெயரில் குளியல் ஹவுசில் திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‛வாடகை தாய்' முறையை நாம் அனைவரும் கேள்விபட்டு இருந்தாலும் கூட நமக்கு ‛வாடகை அப்பா' திட்டம் புதிதாக தான் இருக்கிறது.

அப்படி என்ன திட்டம் இது என்று விரிவாக பார்ப்போம்.

சீனாவில் வடகிழக்கு பகுதியில் லியோனிங் மாகாணம் உள்ளது. இங்கு ஷென்யாங் எனும் பகுதியில் குளியல் ஹவுஸ் (Bath House) செயல்பட்டு வருகிறது. இங்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானவர்கள் சென்று குளிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதற்காக ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக குளிக்கும் இடம் உள்ளது.

இந்நிலையில் தான் அந்த குளியல் ஹவுஸ் சார்பில் தற்போது ஆன்லைனில் விளம்பரம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதில், ‛தங்களின் குளியல் ஹவுசுக்கு வரும் நபர்களுக்கு வாடகை அப்பா திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 'rent a dad' என்ற பெயரில் இந்த திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படும் என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பெண்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம். அதன்படி பெண் ஒருவர் தனது மகனை அந்த குளியல் ஹவுசுக்கு அழைத்து சென்று வாடகை அப்பா திட்டத்தை பயன்படுத்த கூறினால் போதும். இதையடுத்து அங்கு வாடகை அப்பா திட்டத்தில் இருக்குள் ஊழியர் அந்த சிறுவனை தனது கட்டுப்பாட்டில் வைத்து கொள்வார்.

சிறுவனின் உடைகளை மாற்றி குளிக்க வைத்து வேறு உடை மாற்றி விட்டு அவனை அவரது தாயிடம் ஒப்படைத்துவிடுவாராம். அதுவரை அந்த பெண் ஓய்வறையில் ஓய்வெடுக்கலாம். இல்லாவிட்டால் அவரும் பெண்களுக்கான பகுதியில் குளிக்கலாம். இந்த திட்டத்துக்கு தற்போது சீனாவில் நல்ல வரவேற்பு உள்ளது. பல பெண்களும் அந்த குளியல் ஹவுசுக்கு தங்களின் மகனுடன் குவிந்து வருகின்றனர்.

அதாவது மகன் சிறுவனாக இருக்கும்போது குளியல் ஹவுசுக்கு செல்லும் பெண்கள் அவர்களை தங்களுடன் அழைத்து செல்ல வேண்டி இருக்கும். இத்தகைய சூழலில் பிற பெண்களால் சுதந்திரமான குளியலை மேற்கொள்ள முடியாத சூழல் இருந்தது. இந்த பிரச்சனையை தீர்க்கும் வகையில் தான் தற்போது வாடகை தந்தை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் தான் இந்த திட்டத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. அதோடு அந்த குளியல் ஹவுசில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகளுக்கு தனித்தனி அறைகளும், உணவு, குளிர்பானங்கள், மசாஜ்கள், பொழுதுபோக்கு மற்றும் பிற வசதிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.