இந்தியா: தமிழ்நாடு

திமுகவின் முதன்மைச் செயலாளர், சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் என பல பதவிகளை வகித்தாலும் தாம் எங்கிருந்தாலும் தனது நினைப்பெல்லாம் திருச்சி மாவட்டத்தில் தான் இருக்கும் என அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார்.

பணிச்சுமை அதிகரித்துவிட்டதால் தொடர்ந்து பயணங்கள் செல்ல வேண்டியிருப்பதாகவும் இதனால் நம்மை பார்க்கவில்லையே என யாரும் வருந்த வேண்டாம் என்றும் திருச்சி மேற்கு தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகளிடமும், தொகுதி மக்களிடமும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அமைச்சர் நேரு சிறைக்கு செல்வார் என அதிமுகவினர் பேசுவதாகவும் சிறைக்கு செல்வதை பற்றியெல்லாம் தனக்கு எந்த கவலையும் கிடையாது எனவும் நேரு பேசினார். அமைச்சர் பதவியை எப்படி ஏற்றோமோ அதே போல் கட்சிக்காக உழைத்ததற்கு சிறைக்கு செல்லவும் தயங்க மாட்டோம் என்றும் முதல் ஆளாக முன்னிற்ப்போம் எனவும் கூறினார்.

தாம் தவறு செய்திருந்தால் தண்டனையை ஏற்கத் தயார் என்றும் ஆனால் தாம் தவறே செய்யாமல் தன்னை பற்றி பேசுபவர்களின் தவறை எடுக்க ஆரம்பித்தால் அவர்கள் வெளியே வர முடியாது என பகிரங்கமாக சவால் விடுத்தார். ஆட்சியிலிருக்கும் போது மட்டும் கட்சி கரைவேட்டி கட்டும் ஆள் தாமில்லை என்றும் அதிமுகவினர் ஆட்சியில் இல்லை என்றால் கட்சி கரைவேட்டிகளை பீரோவில் வைத்து பூட்டிக்கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தன் மீது 19 பொய் வழக்குகள் போடப்பட்டதாகவும் அதில் 16 வழக்குகளில் வெளியே வந்துவிட்டதாகவும் இன்னும் 3 வழக்குகள் தான் மீதம் இருப்பதாகவும் அதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு திமுக தொண்டரை கூட அதிமுகவால் மிரட்ட முடியாது என்றும் இன்று சரி என்றும் சரி திருச்சி மாவட்டம் என்பது திமுகவின் கோட்டை எனக் கூறியுள்ளார்.