இந்தியா: தமிழ்நாடு

பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் துணை வேந்தர்களின் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்கிறார். பல்கலைக்கழக துணை வேந்தர்களின் பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்கிறார். துணைவேந்தர்கள் இல்லாமல் சில பல்கலைக்கழகங்களில் பணிகள் நடைபெறுவது தாமதமாகி வருவதால் துணை வேந்தர்களின் பணியிடங்களை நிரப்ப ஆளுநர், வலியுறுத்தி கூறியிருக்கிறார்.

மேலும் சிண்டிகேட், செனட் உள்ளிட்ட பல்கலைக்கழக நிர்வாக அமைப்பு சார்ந்த கூட்டங்கள் பல்கலைக் கழகங்களில் நடைபெறவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் துணை வேந்தர்களின் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும், பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு நடத்தப்படும் தேர்வுமுறை யுஜிசி விதிமுறைக்கு உட்பட்டு நடக்கவேண்டும் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, ஆளுநர் அரசியல் செய்து வருவதாக குற்றம் சாட்டினார். நாகை மீன் வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு ஆளுநர் மாளிகையில் நடக்கும் என்பதை எப்படி ஏற்க முடியும்?. பல்கலைக்கழகத்தில் கூட்டங்களை நடத்த வேண்டும் எனக்கூறுபவர் ஆளுநர் மாளிகையில் கூட்டம் நடத்துவது ஏன்? என்று கேட்டார்.

சிண்டிகேட் கூட்டங்கள் பல்கலைக்கழகங்களில் மட்டுமே நடைபெற்று வருகிறது. என்ன நடக்கிறது என்பதை முழுமையாக தெரிந்து கொண்ட பிறகே ஆளுநர் பேச வேண்டும்.மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசையே மதிக்காமல் ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என பாஜக தலைவர் அண்ணாமலையே கூறிவிட்டார். ஆளுநர் என்ன அரசியல் செய்தாலும் அது தமிழ்நாட்டில் எடுபடாது என்றும் கூறினார்.

எல்லா துறையிலும் தாம் தான் எல்லாம் என ஆளுநர் ரவி நினைக்கிறார். பல்கலைக்கழக துணை வேந்தர் தேடுதல் குழுவுக்கு 3 உறுப்பினர்களை அறிவித்த பிறகும் அதை ஏற்க மறுக்கிறார் ஆளுநர். வழக்கமான 3 பேரை தவிர யுஜிசி சார்பில் ஒருவரை நியமிக்க வேண்டும் என ஆளுநர் கூறுகிறார். யுஜிசி சார்பில் உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை அவ்வாறு நியமிக்க ஆளுநர் விரும்பினால் அவரது சார்பில் நியமிக்கப்படும் உறுப்பினரை யுஜிசி பரிந்துரைப்படி நியமிக்கலாம் என்றும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.