இந்தியா: தமிழ்நாடு

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலுக்கு மத்தியில் ஆளும் பாஜக மட்டுமல்லாது மாநில கட்சிகளும் தயாராகி வருகின்ற நிலையில் எதிர்கட்சியினர் ஒன்றாக இணைந்து பாஜகவை வீழ்த்த வலிமையான கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் திமுக தலைமையில் ஒரு அணி உருவாகியுள்ளது. அதே நேரத்தில் அதிமுக பாஜக கூட்டணி கடந்த லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டியிட்டனர். இப்போதும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணியில்தான் பாஜக உள்ளதாக டெல்லி மேலிட தலைவர்கள் கூறி வருகிறார்கள். அதே நேரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவையும், ஜெயலலிதாவையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

அப்போது அதிமுக முன்பை விட வலிமையாக இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறினார். ஆகஸ்ட் 2ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாடு லோக்சபா தேர்தலுக்கான வெற்றியாக அமையும் என்றும் கூறினார்.

அப்போது செய்தியாளர்கள் பாஜக உடன் கூட்டணி தொடர்கிறதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி இப்போது தேர்தல் இல்லையே என்று தெரிவித்தார், தேர்தலுக்கு இன்னமும் ஓராண்டு இருக்கிறது என்றும் தேர்தல் வரும் போது யாருடன் கூட்டணி என்று உங்களை எல்லாம் அழைத்து எந்தெந்த கட்சியோடு கூட்டணி என்பதை அறிவிப்போம் என்றும் ஏற்கனவே பாஜக பற்றி நாங்கள் சொல்லியாச்சு என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

மேலும் அதிமுக என்பது மிகப்பெரிய இயக்கம் எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் தேர்தல் கூட்டணி வைக்கப்பட்ட போது கடைபிடிக்கப்பட்ட வழிமுறைகளை இப்போது கடைபிடிப்போம். காலம் கணிந்து வரும் போது வெளிப்படையாக பேசுவோம். தேர்தலுக்கு இன்னமும் ஓராண்டு இருக்கிறது. அவசரமில்லை. பாஜக உடன் உறவு எப்படி இருக்கிறது என்று ஏற்கனவே நாங்கள் தெளிவுபடுத்தி விட்டோம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். கூட்டணி பற்றி தொடர்ந்து கேள்விகள் வரும்போது நன்றி வணக்கம் என்று கூறி விடைபெற்றார் எடப்பாடி பழனிச்சாமி.

இந்நிலையில் பாஜக உடன் கூட்டணி தொடர்கிறதா இல்லையா என்று வெளிப்படையாக கூறாமல் சென்றது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.