இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 5.4 அலகுகளாக இந்த நிலநடுக்கம் பதிவானது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

பப்புவா தலைநகா் ஜெயபுராவில் உள்ள அபேபுரா மாவட்டத்திலிருந்து 135 கி.மீ. தொலைவில் 13 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் எதுவும் இல்லை என இந்தோனேசிய வானிலை, காலநிலை, புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்தது. இருப்பினும், நிலநடுக்கத்துக்குப் பிந்தைய அதிா்வுகள் இருக்கக்கூடும் என அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பப்புவா மாகாணத்தில் 10 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். இந்தோனேசியாவின் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாகாணங்களில் பப்புவாவும் ஒன்று.

இந்தோனேசியாவில் நிலஅதிா்வுகள், எரிமலை வெடிப்புகள், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகின்றன. கடந்த நவம்பரில் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் (5.6 அலகுகள்) 602 போ் உயிரிழந்தனா். 2021, ஜனவரியில் மேற்கு சுலாவெசி மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் (6.2 அலகுகள்) 100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்.

புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

அங்கு கடந்த 2004 ஆம் ஆண்டு கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி உருவாகி இந்தியா உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் சுமாா் 2.30 லட்சம் போ் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.