உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றான சீனாவில் மக்கள்தொகை வேகமாகக் குறைந்ததை அடுத்து மக்கள் தொகையில் முதலிடத்தில் இருந்த சீனா, இரண்டாவது இடத்திற்கு சரிந்தது.

இதனை அடுத்து மக்கள்தொகையை அதிகரிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது சீனா. இருப்பினும், அதில் பல்வேறு சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது அங்கு குடும்ப வன்முறை அங்கே அதிகரிக்கும் நிலையில், திருமணத்தின் மீதான நம்பிக்கையை அந்நாட்டு இளைஞர்கள் இழந்துள்ளனராம். சீனாவின் கிழக்கு மாகாணமான ஷான்டாங்கில் 37 வயது இளைஞர் தனது மனைவியைச் சாலையில் தள்ளி காரை கொண்டு ஏற்றி கொடூரமாக கொலை செய்துள்ளார். 

கடந்த மாதம் தெற்கு மாகாணமான குவாங்டாங்கில் இளைஞர் ஒருவர் தனது மனைவியையும் அவரது சகோதரியையும் கத்தியால் குத்திக் கொன்றார். அவர் பல ஆண்டுகளாகவே தனது மனைவியைக் கண்மூடித்தனமாகத் தாக்கி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதேபோல செங்டு என்ற நகரில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் விவாகரத்து பெற முயன்றுள்ளார். இதை அறிந்த கணவர் அவரை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார், இந்த தாக்குதலில் அந்த பெண் படுகாயமடைந்த நிலையில், சில வாரங்களில் ஐசியுவில் இருந்து சிகிச்சை பெறும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களால் இளைஞர்கள் குறிப்பாகப் பெண்கள் திருமணத்தை அதிகம் தவிர்க்க ஆரம்பித்துள்ளனர். மக்கள்தொகை சரிவதால் என்ன செய்யலாம் எனக் குழப்பத்தில் இருக்கும் ஜி ஜின்பிங் அரசுக்குச் சீன மக்களின் இந்த மனநிலை சிக்கலைத் தருவதாகவே இருக்கிறது. இதனையடுத்து அலர்ட் ஆகியுள்ள சீன அரசு, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.