ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா தீவுப்பகுதியில் உள்ள நாகோ நகரில் துறைமுகப் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள கடல் நீரானது திடீரென சிவப்பு நிறமாக மாறி காட்சியளித்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அருகில் உள்ள பீர் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே, கடல் நீர் செந்நிறமாக மாறியது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பீர் தயாரிப்பு நிறுவனமான ஓரியன் ப்ரூவரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவுகளில் பயன்படுத்தப்படும் வண்ண சாயம் ஆற்றில் கசிந்ததால் தண்ணீரின் நிறம் மாறியதாக தெரிவித்துள்ளார். இதனால் சுகாதார அபாயங்கள் எதுவும் இல்லை எனவும், கடல்வாழ் உயிரினங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனவும் கூறியுள்ளது. அதே சமயம், மிகப்பெரிய பிரச்சினை மற்றும் கவலையை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பும் கோரியுள்ளது.