இந்தியா: தமிழ்நாடு

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வருகை தந்தார்.

பின்னர் திருச்செந்தூரில் சுப்ரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது...

பிரதமர் மோடி வலிமையாக நடை போட்டு வருகிறார். அவரை யாரும் அசைக்க முடியாது. அனைவருக்கும் ஒரே சட்டம் தான் இருக்க வேண்டும். அனைவரும் சமமாக இருக்கத்தான் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட்டது. முத்தலாக் தடை சட்டத்தால் இஸ்லாமிய சகோதரிகள் மிகவும் சந்தோசமாக உள்ளார்கள்.

யாரும் தீக்குளிப்பதனால் ஆளுநரை மாற்றிவிட முடியாது. ஆளுநரின் கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ள வேண்டும். அனைவருக்கும் கருத்துரிமை உள்ளது. யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம். ஆளுநரை குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் நினைத்தால் மட்டும்தான் மாற்ற முடியும் எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆளுநரான ஆர்.என்.ரவி திமுக அரசின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில் மதுரை மானகிரி பகுதியை சேர்ந்த ஆவின் திமுக தொழிற்சங்க தலைவரான கணேசன் என்பவர் ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்ற வேண்டும் என்றும், அவ்வாறு மாற்றாவிட்டால் 28ஆம் திகதி மதுரையில் தீக்குளிப்பேன் என்றும் போஸ்டர் ஒட்டியிருந்தார்.

இந்நிலையில் நேற்று காலை கருணாநிதி சிலை முன்பாக காரில் வந்து இறங்கிய திமுக நிர்வாகி கணேசன் திடீரென தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி உடலில் தண்ணீரை ஊற்றி குளிக்க வைத்து பின்னர் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.