இந்தியா: தமிழ்நாடு

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் அண்ணாமலை இங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு திரும்பினார்.

லண்டனில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அண்ணாமலையை பாஜகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குடன் நீங்கள் லண்டனில் ரகசிய சந்திப்பு நடத்தியதாக தகவல் வருகிறதே உண்மையா எனக் கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்வியால் டென்ஷனான அண்ணாமலை, கோபமாகப் பேசினார்.

செய்தியாளரிடம் கோபமாகப் பேசிய அண்ணாமலை, "தகவலை உங்களுக்கு யார் சொன்னது? திமுக வட்டாரத்தில் இருந்து ஸ்டாலின் சொன்னாரா? உதயநிதி ஸ்டாலின் சொன்னாரா? உங்களுக்கு தகவல் கொடுத்தது என யார்னு முதலில் சொல்லுங்கள். உங்களுக்கு சோர்ஸ் எங்க இருந்து வந்துச்சு? ரோட்டுல டீ குடிக்கிற ஆள் மாதிரி கேள்வி கேட்கக்கூடாது.

முட்டாள்தனமா கேள்வி கேட்கக்கூடாது. உங்க கேள்விக்கு ஏதாவது லாஜிக் இருக்கா? நான் என்ன நீங்க கேட்குற கேள்விக்கெல்லாம் கை கட்டி பதில் சொல்ல வந்திருக்கேனா? நீங்க என்ன வேணாலும் கேட்பீங்க நான் காமெடியன் மாதிரி பதில் சொல்லி, மக்கள் கை தட்டி சிரிப்பதற்கா நான் பிரஸ் மீட் நடத்துகிறேன்?

16 மணி நேரம் விமானத்தில் பயணித்து வந்து இங்கு வேலையில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறேனா? நீங்க இந்த மாதிரி கேள்வி கேட்டால் உங்க பதிலும் அநாகரீகமாகத்தான் இருக்கும் என கடுமையாக பேசினார் அண்ணாமலை.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.