இந்தியா: தமிழ்நாடு

தமிழ் தேசியம் எனும் பிரிவினைவாதத்தை கைவிட்டால் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு பாஜக தயார் என அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது...

சீமான் இன்று பேசும் கருத்துகளை எல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்னரே நான் பேசி இருக்கிறேன். அவருடன் நெருக்கமான உறவும் இருந்தது.

அண்மையில் கூட பாஜகவை வரவேற்பதாக சீமான் கூறியிருந்தார். சீமானின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நான் 4 முறை பங்கேற்றிருந்தேன்.

சீமான் தமது தமிழ் தேசியம் என்கிற பிரிவினைவாதத்தைக் கைவிட்டால் நெருங்கி செல்லலாம். தமிழ் தேசியம் என்பது ஒரு பிரிவினைவாதம். திராவிடம் என்பதை சீமான் ஏற்கவில்லை.

அதேபோல தமிழ் தேசியம் எனும் பிரிவினைவாதத்தை பாஜகவும் ஏற்கவில்லை.

சீமான் எனது நெருங்கிய நண்பர். அவருக்கு நான் ஒன்றை சொல்கிறேன். தமிழ் தேசியம் எனும் பிரிவினைவாதத்தை கைவிடுங்கள். நாம் தனித்தனியே இருந்தால் எதுவும் செய்ய முடியாது. சீமான் பகுத்தறிவுடன் சிந்தித்து தமிழ் தேசிய நிலைப்பாட்டை மாற்றினால் அவருடன் அடுத்ததாக பேச தயார்.

இவ்வாறு எச்.ராஜா கூறியுள்ளார்.