இந்தியா: தமிழ்நாடு

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வழங்க பணம் பெற்று கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு பல்வேறு அதிரடி திருப்பங்களை சந்தித்தது. அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை 13ஆம் திகதி நள்ளிரவு கைது செய்தனர்.

கைது செய்து அழைத்து சென்ற போது செந்தில் பாலாஜி உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 15 ஆம் தேதி இரவு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து அங்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் செந்தில் பாலாஜி உள்ளார்.

இதனிடையே, செந்தில் பாலாஜியை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி கொடுத்து இருந்தது. அப்போது பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டு இருந்தது. அதாவது, மருத்துவமனையிலையே செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த வேண்டும்.

அவருடைய உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகுதான் விசாரிக்க வேண்டும், விசாரணையின் போது மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் குடும்பத்தினரை அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளையும் விதித்து இருந்தது.

அமலாக்கத்தூறை காவலில் எடுக்க நீதிமன்றம் அனுமதி கொடுத்தாலும் 4 நாட்களுக்கு மேல் ஆகியும் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தவில்லை.

இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என்று அமலாக்கத்துறை தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் இது தொடர்பாக மனு எதையும் அமலாக்கதுறை தரப்பில் தாக்கல் செய்யவில்லை.