Breaking News

10,000 பேர் இறந்த இடத்தில் பூத்த ஒரு "உயிர்" - துருக்கி நிலநடுக்கத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...!!

10,000 பேர் இறந்த இடத்தில் பூத்த ஒரு "உயிர்" - துருக்கி நிலநடுக்கத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...!!

துருக்கி நிலநடுக்கம் காரணமாக 10000க்கும் அதிகமானோர் இதுவரை பலியாகி உள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உண்மையான பலி எண்ணிக்கை அங்கு 25 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துருக்கியில் மட்டுமின்றி சிரியாவிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.சிரியாவில் நிலநடுக்கம் காரணமாக 8 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.

இந்த சோகத்திற்கு இடையில்தான் துருக்கியில் நடந்த சம்பவம் ஒன்று மக்கள் இடையே நெகிழ்ச்சியை பெற்றுள்ளது.

அதன்படி துருக்கியில் நேற்று கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி இருந்த மக்களை மீட்பு படையினர் மீட்டு வந்தனர். சிக்கி இருந்த நபர்களை தூக்கி ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். தொடர்ந்த இறந்த நிலையில் உடல்கள் கிடைத்ததால் மீட்பு படையினர் பலரும் மனமுடைந்த நிலையில்தான் வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில்தான் மீட்பு படையினர் ஒரு சுவரை எடுத்த போது அதில் புதிதாக பிறந்த குழந்தை இருந்தது.

அப்போதுதான் தொப்புள் கொடி அறுக்கப்பட்டு, ஈரம் கூட காயாத அந்த குழந்தை அங்கேயே கிடந்துள்ளது.

ஆனால் அந்த குழந்தையின் தாய் பிரசவ வலியில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி பலியாகி இருந்தார். இடிபாடு காரணமாக அவர் பலியாகவில்லை. மாறாக பிரசவத்தின் போது அவர் பலியாகி இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

ஆனால் அந்த குழந்தை நல்ல உடல்நிலையில் இருந்துள்ளது. அந்த குழந்தை பெண் குழந்தை ஆகும். உடலில் காயங்கள் எதுவும் இன்றி அந்த குழந்தை நல்ல உடல் நிலையில் இருந்துள்ளது.

10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்த ஒரு இடத்தில் நேற்று புதிதாக ஒரு உயிர் பூத்து இருக்கிறது.

பல சடலங்களை கொண்டு வந்த பணியாளர்கள் அந்த கட்டிடத்தில் இருந்து புதிதாக பிறந்த ஒரு உயிரை சுமந்து வந்தது துருக்கி மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.