இந்தியா: தமிழ்நாடு

மதுரை பாண்டிக்கோவில் ரிங்ரோடு அருகே உள்ள கலைஞர் திடலில், தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனம் சார்பில், 'மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா' நடந்தது.

இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது...

ஒரு சிலம்பை வைத்து மன்னனிடம் நீதிகேட்ட கண்ணகி வாழ்ந்த மண் இது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்காக நான் மதுரை வந்திருந்தேன். அப்போது, மாவட்ட செயலாளர் இது தான் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அடிக்கல் நாட்டிய இடம் என்று காட்டினார்.

அப்போது தான் நான் மதுரையில் இருந்து செங்கலை எடுத்துக்கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே? என தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்தேன். ஆனால் இப்போது வரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணி தொடங்கப்படவில்லை.

நடப்பாண்டு பட்ஜெட்டில் கூட மதுரையில் எய்ம்ஸ் கட்டுவதற்காக நிதி ஒதுக்கப்படவில்லை.

எனினும் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்ட கலைஞர் நூலகப் பணிகள் நிறைவடையும் நிலைக்கு வந்துவிட்டது. அவர்கள் வாயில் வடை சுடுவார்கள். ஆனால் தி.மு.க. ஆட்சி சொன்னதை செய்யும்.

வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. அப்போதும் கூட எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை என்றால் மதுரையில் வசிக்கும் மக்கள் எல்லோரும் கையில் செங்கலை எடுத்து போராடுவாங்க.

சிலிண்டருக்கு மத்திய அரசு மானியம் தரவில்லை. எல்ஐசியில் போட்ட பணம் காற்றில் போய் விட்டது. இதையெல்லாம் எதிர்க்கட்சிகள் கேட்பதில்லை.

அதிமுக தேர்தலின் போது மட்டுமே இங்கே உங்களை சந்திக்க வருவாங்க.ஆனால் திமுக எப்போதுமே உங்களுடன் தான் இருக்கும். எனவே நீங்களும் இந்த அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

தமிழகத்தில் முன்பு கஜானா காலியாக இருந்தது. அடிமை அரசாக அதிமுக இருந்தது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் இந்நிலை அனைத்தும் மாற்றப்பட்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் தான் முதல்வர் ஸ்டாலின் போட்ட முதல் கையெழுத்து.

இதேபோல் ஏழை பெண்கள் கல்வியை தொடர புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில், இதுவரைக்கும் 1 லட்சத்து 16 ஆயிரம் பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.