இந்தியா: தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சகோதரி மகளான கயல்விழியின் நிச்சயதார்த்த விழா சிவகங்கையில் நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்துகொண்ட சீமான் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்...

பேனா நினைவு சின்னம் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்தை வரவேற்கிறேன்.

பேனா நினைவு சின்னம் வைப்பதில் எந்த முரணும் கிடையாது. கடலுக்குள் வைப்பதில் தான் பிரச்சினை. ஏனென்றால் கடல் கட்சிக்கு சொந்தமானதல்ல. அது பொது சொத்து. அதனை அப்படியெல்லாம் பயன்படுத்த அனுமதிக்க முடியாது.

கடற்கரையில் அடக்கம் செய்ய அனுமதித்ததே, அண்ணா மீது இருந்த மரியாதை காரணமாக தான். மக்கள் அழுதுகொண்டே அடக்கம் செய்வதற்கு அனுமதித்துவிட்டார்கள்.

கிட்டத்தட்ட 8 ஏக்கர் கடற்கரையை காலி செய்துவிட்டார்கள். அறிவார்ந்த சமூகம் அதனை செய்யாது. தொலை நோக்கு பார்வையுள்ள தலைவன் சிந்திக்க வேண்டும்.

நினைவிடம் அமைக்கும் இடத்தில் நினைவு சின்னம் அமைக்கலாமே? யாரும் வேண்டாமென்று சொல்லவில்லை. கடலில் வைப்பதற்கு செயற்கையாக ஒரு பாறையை உருவாக்க வேண்டும்.

மதுரையில் நூலகம் கட்டி வருகிறார்கள், அங்கு அமைக்கலாம். அண்ணா அறிவாலயம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கருணாநிதி நினைவிடம் என எங்கு வேண்டுமானாலும் அமைக்கலாம். ஆனால் கடல் எங்களின் கடல். அதனை எந்த கொம்பாதி கொம்பனும் தொட முடியாது என்று தெரிவித்தார்.

தொடர்ந்து எங்கள் கைகள் பூப்பரிக்குமா என்று சேகர்பாபு பேசிய கருத்து பற்றிய கேள்விக்கு, அவர் உரிமையில் திட்டுகிறார். கடல் பொதுச்சொத்து. அது சேகர்பாபுவுக்கும் தெரியும்.

கடலுக்குள் பேனா, தொப்பி என்று நினைவு சின்னம் வைப்பதில் ஏற்பில்லை. நான் அண்ணனாக மதிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கையாக வைக்கிறேன்.

கடலுக்குள் பேனா நினைவு சின்னம் வேண்டாம். நினைவிடத்தில் பேனா நினைவு சின்னம் வைத்தால், யாரும் கேட்கப்போவதில்லை என்று தெரிவித்தார்.