சீனாவின் இராட்சத பலூன் அமெரிக்காவை உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், அதனை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான பென்டகன் தெரிவித்துள்ளது.

 இந்த வார தொடக்கத்தில், வட அமெரிக்கா முழுவதும் உள்ள இராணுவ தளங்களில் சீனாவின் இராட்சத பலூன் உளவு பார்த்ததாக அமெரிக்கா தெரிவித்தது.

“இந்த பலூனை சுட்டு வீழ்த்திய சம்பவத்தின் மூலம், ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் அவரது தேசிய பாதுகாப்பு குழு எப்போதும் அமெரிக்க மக்களின் பாதுகாப்பு முதலிடம் கொடுப்பதை நிரூபிக்கிறது, அதே நேரத்தில் சீனாவின் இந்த ஏற்றுக்கொள்ள முடியாத மீறல்களுக்கு தக்க பதிலடியையும் அளிக்கிறது” என்று பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் கூறினார்.

குறித்த பலூன், ஜனவரி 28 அன்று அமெரிக்க வான்வெளிக்குள் நுழைவது கண்டறியப்பட்டது.

 கண்டம் விட்டு கண்டம் பாயும்-பொலிஸ்டிக்-ஏவுகணைக் குழிகள் உள்ள மொன்டானாவில் அந்த பலூன், சனிக்கிழமையன்று (பிப். 4) வடக்கு கரோலினாவுக்குச் சென்றது.

பலூன் சீனாவுக்கு சொந்தமானது என்பதை சீன வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (பிப். 3) உறுதிப்படுத்தியது.

 ஆனால் அது காலநிலை ஆராய்ச்சியை நடத்தும் ஒரு வான்வழி ஆய்வுக்கானது என்று கூறியது.

அதுவும் வழித்தவறிவிட்டதாக தெரிவித்தது. தரையில் உள்ள மக்கள் அல்லது சொத்துக்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடாது என்பதற்காக அமெரிக்க அதிகாரிகள் இத்தனை நாள்களாக அதை சுட்டு வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.