மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் போராட்டம் நடைபெற்றது.

இதில் திமுக, காங்கிரஸ், உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் சுமார் 2,000 பேர் பங்கேற்றனர்.

அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், நவாஸ் கனி, சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ஒற்றை செங்கல் பிரச்சாரத்தின் மூலம் கவனம் ஈர்த்த அமைச்சர் உதயநிதியை போல் இந்தப் போராட்டத்திற்கு வந்திருந்தவர்களும் ஒற்றைச் செங்கலை கையில் எடுத்து வந்திருந்து கவனம் ஈர்த்தனர்.

மேலும் 'எங்கள் எய்ம்ஸ் எங்கே' என்ற முழக்கத்தை தொடர்ச்சியாக முன் வைத்து மத்திய அரசின் நிர்வாகமுறையை பற்றி கடுமையாக சாடினர். கடந்த 2018ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது.

மதுரையில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு ஏறத்தாழ 4 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையிலும் இதுவரை அங்கு எந்தப் பணிகளும் தொடங்கப்படவில்லை.

இது குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகள் எடுத்தும் எதுவும் நடக்கவில்லை.

இதனால் தான் போராட்டங்களை இனி தொடர்ச்சியாக நடத்துவது என முடிவெடுத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முதற்கட்டமாக இன்று தொடர் முழக்கப் போராட்டம் நடத்தியுள்ளது.

இனி உண்ணாவிரதம், பேரணி என மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தீவிரம் காட்டத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் எய்ம்ஸ் விவகாரம் தேர்தல் முடிவில் நிச்சயம் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.