அரியலூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுகவை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது....

பல ஆண்டுகளாகத் தொடர்ந்து காவேரி பிரச்சினைக்குத் தீர்வு கண்ட ஒரே அரசு அதிமுக அரசு தான். அதேபோல ஓரே ஆண்டில் தமிழ்நாட்டிற்கு 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளை இங்கே கொண்டு வந்துள்ளோம்.

இது மட்டுமில்லாமல் ஏழு சட்டக் கல்லூரியையும் கொண்டு வந்தோம்.

நமது நாட்டிலேயே தமிழ்நாடு தான் உயர் கல்வியில் டாப் இடத்தில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அதிமுக தான். திமுக எதாவது ஒரு திட்டத்தையாவது உருப்படியாகக் கொண்டு வந்துள்ளனரா?

நாம் முதல்வராக இருந்த போது கொண்டு வரப்பட்ட முதியோர் உதவித் தொகை திட்டத்தில் பலரும் பயன்பெற்றனர்.

ஆனால், அதையும் கூட திமுக ஆட்சியில் பலருக்கும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல திருமண உதவித் தொகை திட்டத்திலும் நகையைக் கொடுப்பதில்லை.

திமுகவில் கட்சிக்காக உழைத்தவர்களை விட்டுவிட்டு உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளனர்.

கருணாநிதி பேரன், ஸ்டாலினின் மகன் என்பது மட்டுமே உதயநிதியின் அடையாளம். ஸ்டாலின் தனது மகன் உதயநிதிக்கு முடிசூட்டு விழாவை நடத்தியுள்ளார் என்றே சொல்லலாம்.

பொங்கலுக்கு அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,500 மற்றும் 21 பொருட்களைத் தந்தோம். ஆனால், திமுக ஆட்சியில் கொடுக்கப்படும் பொருட்கள் தரமற்றதாக இருக்கிறது.

இது மட்டுமா? அனைத்து கட்டணத்தையும் திமுக தொடர்ந்து உயர்த்தியே வருகிறார்கள். அதிமுக ஆட்சியில் தடை இல்லாத மின்சாரம் அளித்தோம்.

ஆனால், இவர்கள் ஆட்சியில் மின் கட்டணத்தையும் உயர்த்திவிட்டார்கள்.

மின் தடையும் ஏற்படத் தொடங்கிவிட்டது. இதுதான் இவர்கள் சொல்லும் திராவிட மாடல் ஆட்சியா..

திமுக ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் ஆகிவிட்டன.

இன்னும் அவர்கள் தேர்தல் சமயத்தில் கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

தேர்தல் காலத்தில் ஒரு பேச்சு தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சு என்பதே அதிமுகவின் நிலைப்பாடாக இருக்கிறது.

சிலிண்டருக்கு மாதம் நூறு ரூபாய் மானியமாகத் தருவதாகச் சொன்னார்களே அது என்ன ஆனது. இப்படி நிறைவேற்றாமல் விட்ட பல வாக்குறுதிகளைச் சொல்லாம்.

இதற்குப் பெயர் தான் திராவிட மாடல் ஆட்சியா? என்று கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.