தமிழ் நூல்களை மொழியாக்கம் செய்ய தமிழ்நாடு அரசால் மொழிபெயர்ப்பு மானியமாக 3 கோடி ரூபாய் Translation grant வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகையில்...

தமிழ் மொழியை உலகெங்கும் எடுத்துச் செல்லும் வகையில் தமிழ் மொழியின் சிறந்த படைப்புகளை உலக மொழிகளிலும் இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்ய தமிழ்நாடு அரசால் மொழிபெயர்ப்பு மானியமாக 3 கோடி ரூபாய் Translation grant வழங்கப்படும் என்பதையும் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நான் அறிவிக்க விரும்புகிறேன்.

முதன்முறையாக நடந்து முடிந்த இந்த பன்னாட்டு புத்தக் காட்சி மூலம் தமிழ் மொழியிலிருந்து பிற இந்திய மற்றும் உலக மொழிகளுக்கும், பிற மொழிகளில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்கும் வகையில் பல்வேறு பதிப்பகங்களுக்கு இடையே 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது என்பதையும் பெருமிதத்துடன் அறிவிக்க நான் விரும்புகிறேன்.

உலகலாவிய அறிவு பரிமாற்றத்திற்கான தளமாக சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

எழுத்தாளர்களுக்கு - பதிப்பாளர்களுக்கு - மொழிபெயர்ப்பாளர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு.

இதனை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி, தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் உலக அரங்கில் உயர்ந்த நிலையில் நிலைநிறுத்தும் என்ற நம்பிக்கையோடுதான் அரசு இந்த நிதி ஒதுக்கீட்டைச் செய்தது.

அறிவுச் சக்தியை உருவாக்குவது என்பதை ஆக்கபூர்வமான முதலீடாகவே நாங்கள் நினைக்கிறோம்.

இதனை அறிவுலகத் தொண்டாகக் கருதி நாங்கள் செய்து வருகிறோம். இதனை தமிழ்நாடு அரசு தனது கடமையாகக் கருதுகிறது. யாரும் கோரிக்கை வைத்து இதை நாங்கள் செய்யவில்லை.

இப்படிச் செய்வதுதான் எங்களது வாடிக்கை! தமிழ்நாட்டு எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் இதனை நன்கு அறிவார்கள். இந்த அறிவுலகப் பணிக்கு அனைவரும் ஒத்துழைப்பை நல்க வேண்டும்.

இது தொடர்பான ஆலோசனைகள் இருந்தால் அதனை ஏற்றுக் கொள்ளவும், திறந்த மனதுடன் தமிழ்நாடு அரசு தயாராகவும் இருக்கிறது என அவர் தெரிவித்தார்.