ஆக்லாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னியை நோக்கி நேற்று மதியம் பயணித்த குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் 145 பயணிகள் பயணம் செய்தனர்.

இந்த விமானம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குள் நுழைந்து நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் 2 என்ஜின்களில் ஒன்று திடீரென செயலிழந்தது.

இதனால் விமானத்தின் வேகம் குறைந்து, குறைவான உயரத்தில் பறந்தது.

இதனையடுத்து விமானிகள் விமானம் ஆபத்தில் இருப்பதாக சிட்னி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து, விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானிகளை தொடர்பு கொண்டு விமானத்தை அவசரமாக தரையிறக்க கேட்டுக் கொண்டனர்.

மேலும் விமான நிலைய ஓடுபாதையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்சுகள் தயார்நிலையில் வைக்கப்பட்டன.

இதையடுத்து, விமானிகள் விமானத்தை அவசரமாக தரையிறக்கினர்.

அதனை தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

விமானத்தின் என்ஜின் செயலிழந்ததை விமானிகள் உடனடியாக கண்டறிந்து, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து விமானத்தை அவசரமாக தரையிறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்து.

பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பினர்.