போர்ச்சுக்கல் வீரரும் நட்சத்திர கால்பந்து வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவூதி அரேபியாவின் அல் நஸ்ர் கிளப் அணியில் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அவரை விளையாட விடாமல் அவமதித்தபோதே அவரது ஆட்டம் முடிந்துவிட்டதாக பலர் பேசிய நிலையில் இதன் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்து உள்ளார் ரொனால்டோ.

நவம்பர் மாதம் தொடங்கிய பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் போட்டி கத்தாரில் நடைபெற்று கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி இறுதிப் போட்டியோடு நிறைவடைந்தது.

பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தி 36 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றியை பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்த உலகக்கோப்பையில் ரொனால்டோவுக்கு எதிராக பல விடயங்கள் நடைபெற்றதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ரொனால்டோவின் கடைசி உலகக்கோப்பை தொடராக கருதப்பட்ட இந்த தொடரில் அவரை விளையாட அனுமதிக்காமல் அவரது பயிற்சியாளர் பெர்னாண்டோ ரொனால்டோவை பெஞ்சில் அமர வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போர்ச்சுகல் மொராக்கோவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் தோற்று வெளியேறியதை ஏற்க முடியாமல் ரொனால்டோ மைதானத்திலேயே கதறி அழுதது அவரது ரசிகர்களையும் கண்ணீர் விடவைத்தது. 

இதோடு ரொனால்டோவின் விளையாட்டு வாழ்க்கை முடிவடைந்து விட்டதாக பலரும் பேசி வந்த நிலையில் சவூதி அரேபிய அணியில் ரீ எண்ட்ரி கொடுத்து இருக்கிறார் ரொனால்டோ.

ஆம் அல் நஸ்ர் என்ற 65 ஆண்டுகள் பழமையான சவூதி அரேபிய லீக் அணிக்காக விளையாட ரொனால்டோ 2025 ஆம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இதற்காக ரூ.4,400 கோடி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.