வெலிங்டனில் உள்ள இரண்டு வீடுகளில் அத்துமீறி நுழைய முயன்ற இரண்டு மர்ம நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அந்த வீடுகளில் இருந்த பெண்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குற்றவாளிகளை அடையாளம் காண பொதுமக்களின் உதவி தேவை என்று துப்பறியும் சார்ஜென்ட் கிராண்ட் கரோல் தெரிவித்தார்.

இதன்படி கடந்த செவ்வாய் கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் Mount Cook பகுதியில் உள்ள ஒரு வீட்டின் ஜன்னல் வழியாக ஏற முயன்ற ஒருவரை கண்டு அந்த வீட்டில் இருந்த பெண் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அந்த பெண்ணை கண்டதும் அந்த மனிதன் ஓடிவிட்டான் என்று கரோல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, நேற்றைய தினம் அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டில் காலை 6.40 மணியளவில் நபர் ஒருவர் நுழைய முயன்றதை அந்த வீட்டில் இருந்த பெண் கண்டு கொண்டார்.

பின்னர் அந்த நபரும் சம்பவ இடத்திலிருந்து ஓடினார். பொலிஸார் காவல்துறை நாயைப் பயன்படுத்தியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களால் கொடுக்கப்பட்ட குறித்த நபர் தொடர்பான விளக்கங்கள் ஒருவருக்கொருவர் ஒத்ததாக இருந்ததால், அவர்கள் ஒரே நபராக இருக்கலாம் என்று பொலிஸார் நம்புவதாக கரோல் கூறினார்.

இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகள் அல்லது விசாரணைக்கு உதவக்கூடிய தகவல் உடையவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கவலை கொண்டுள்ளதாக கரோல் கூறினார்.

"இதற்கு பொறுப்பானவர்களைக் கண்டுபிடிப்பதில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்."

சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.