மெக்சிகோ நாட்டில் வெராகுரூஸ் நகரில் மெடலின் டெல் பிரேவோ என்ற பகுதியில் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கர்ப்பிணியான 20 வயதுடைய அந்த பெண், ரோசா ஐசலா கேஸ்டிரோ வஸ்கிஸ் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரை ஒரு தம்பதியினர் சேர்ந்து திட்டமிட்டு படுகொலை செய்தது தெரிய வந்துள்ளது.

8 மாத கர்ப்பிணியான ரோசா ஐசலாவை சமூக ஊடகம் வழியே குற்றவாளிகளான கொன்சாலோ மற்றும் வெரோனிகா என்ற அந்த தம்பதி தொடர்பு கொண்டுள்ளனர்.

இதில், ரோசாவுக்கு பிறக்க போகும் குழந்தைக்கு தேவையான ஆடைகளை தருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதனை நம்பி‌ அவர்களை சந்திக்க விமான நிலையம் அருகே உள்ள பகுதிக்கு ரோசா சென்றுள்ளார்.

அந்த தம்பதியினருக்கு குழந்தை பெற்றெடுக்க முடியாத சூழலில் குழந்தையை திருடி செல்லும் திட்டத்தில் அவர்கள் இருந்துள்ளனர்.

இதன்படி கடைசியாக அந்த பெண்ணை ரோசா சந்திக்கிறார்.

அந்த காட்சிகள் சி.சி.டி.வி.யில் பதிவாகி உள்ளன.

அப்போது ரோசாவிடம் பேசும் அந்த பெண் சற்று படபடப்புடன் காணப்படுகிறார்.

பின்னர் ஒரு வாகனத்தில் ஏறி பெண்ணுடன் ரோசா செல்கிறார். அதன்பின்னர் அவரை உயிருடன் பார்க்க முடியவில்லை.

இந்நிலையில் அந்த தம்பதியிடம் புதிதாக பிறந்த குழந்தை ஒன்று திடீரென வந்தது சந்தேகம் கிளப்பியது என பொலிஸார் கூறுகின்றனர்.

அவர்கள் பெண்ணை கடத்தி படுகொலை செய்துள்ளனர் என கூறப்படுகிறது. இதன்பின் வயிற்றில் இருந்த குழந்தையை வெளியே எடுத்துள்ளனர்.

இதில், ரோசா உயிரிழந்து விட்டார். இந்த கொலை வழக்கில் தம்பதியை பொலிஸார் கைது செய்துள்ளனர் என வெராகுரூஸ் நகரின் அரசு வழக்கறிஞர் உறுதிப்படுத்தி உள்ளார்.

தம்பதியிடம் இருந்து பெண் குழந்தை கைப்பற்றப்பட்டுள்ளது.