சீனாவில் கொவிட் பரவல் காரணமாக ஜீரோ கொவிட் கொள்ளையின் கீழ் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

சமீபத்தில் அங்குள்ள உரும்கி நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் கொவிட் கட்டுப்பாடுகளால் தீயை அணைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

இதனால் சுமார் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபோல சீனாவில் பல இடங்களிலும் கொவிட் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பலரும் உயிரிழக்கும் சோகமும் நடந்து வருகிறது.

இதனால் அதிருப்தியடைந்த மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் மக்கள் தொடர்ச்சியாக வீதிகளில் இறங்கி போராடினர்.

இந்நிலையில் சீனாவின் கடுமையான கொவிட் கட்டுப்பாடுகளால் இழந்த உயிர்களுக்கு இரங்கல் தெரிவிக்கவும் மற்றும் சீனாவின் ஜீரோ கோவிட் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் நேற்று இரவு ஆக்லாந்தின் Aotea சதுக்கத்தில் சீன சமூகத்தைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் கூடினர்.

சீனா முழுவதும் நடைபெறும் போராட்டம் வெளிநாடுகளில் உள்ள சீனர்கள் மத்தியிலும் எதிர்ப்புகளைத் தூண்டியுள்ளது.

அந்தவகையில் நியூயார்க், மெல்போர்ன், சிட்னி, ஹாங்காங் மற்றும் டோக்கியோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விழிப்புணர்வு மற்றும் எதிர்ப்புகள் உருவாகியுள்ளன.

இந்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர், சீன அதிபரின் ஆட்சியை எதிர்த்து நேற்று Aotea சதுக்கத்தில் மாண்டரின் மொழியில் கோஷமிட்டனர்.

"எங்களுக்கு தலைவர்கள் வேண்டாம், எங்களுக்கு சர்வாதிகாரம் வேண்டாம்"

"சுதந்திரம் இல்லாமல், நான் இறந்துவிடுவேன்.

"ஜி ஜின் பிங், பதவி விலகுங்கள், CCP பதவி விலகுங்கள்." என கோஷமிட்டனர்.

நேற்று இரவு வெலிங்டனிலும் இதேபோன்று எதிர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது.

சீனாவில் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இந்த வாரம் சீனாவில் குவாங்சோவில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சீனாவின் குறைந்தது இரண்டு முக்கிய நகரங்களில் கொவிட் -19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.