நியூசிலாந்தில் தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரத்தில் பலர் ஈடுபட்டு வரும் நிலையில் ஒரு தம்பதியினர் தங்கள் 4 மாத குழந்தைக்கு உடனடியாக இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பதாகவும், ஆனால் அறுவை சிகிச்சைக்கு தேவையான இரத்தத்தை தடுப்பூசி செலுத்தியவர்களிடம் இருந்து பெறுவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை எனவும் கூறி வருகின்றனர்.

 'தடுப்பூசியில் தோய்க்கப்பட்ட இரத்தம்' தனது குழந்தைக்கு வேண்டாம் எனவும், இது தவிர மருத்துவர்கள் கூறும் அனைத்து கட்டுப்பாடுகளுக்கும் தாங்கள் உடன்படுவதாகவும் அந்த குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பெற்றோர் மீது Health NZ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அதில் குழந்தையின் பாதுகாவலாராக இருக்கும் உரிமையை அந்த பெற்றோரிடம் இருந்து பறித்து, நீதிமன்றம் அந்த உரிமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், இதன் மூலம் குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இரத்த தானம் செய்யப்படும் போது தடுப்பூசி செலுத்தியவர்கள், செலுத்தாதவர்கள் என பிரிக்கப்படுவது இல்லை என்றும், தடுப்பூசி செலுத்தியவர்களின் இரத்தத்தை பெறுபவர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் நியூசிலாந்து இரத்த தான கழகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு மீதான முழு விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் என கூறப்படுகிறது.

மேலும் குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு தடுப்பூசி போடாதவர்களின் ரத்தத்தை மட்டுமே விரும்பும் பெற்றோர்கள், "வழங்கப்படும் சுகாதார ஆலோசனைகளைக் கேளுங்கள்" என்று சுகாதார அமைச்சர் Andrew Little தெரிவித்துள்ளார்.