சீன மக்கள் கொவிட் கட்டுப்பாடுகளை நீக்கவும், மக்களை இயல்பு வாழ்க்கையை வாழ விடவும், சீன அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்ற முழக்கங்கள் உடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் போராட்டம் களத்தில் இருந்து போராடும் மக்களைக் காட்டிலும் இணையம் வழியாகப் போராடுவோர் எண்ணிக்கை மிகவும் அதிகம், அதேபோல் இணையத்தின் சக்தியும் அதிகம் என்பதால் சீன அரசு நூதனமான முறையில் மக்களைத் திசை திருப்ப முயன்றுள்ளது.

இந்நிலையில் சீன அரசு சார்பில் இயங்கி வரும் டிவிட்டர் anti-propaganda team முலம் மக்களைத் திசை திருப்பும் நடவடிக்கைகள் அதிகளவில் செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம் போராட்டம் நடக்கும் ஊர் அல்லது பகுதி குறித்து டிவிட்டரில் தேடினால் 50 சதவீத பாலியல் தொடர்பான பதிவுகளும், 50 சதவீதம் போராட்டம் குறித்த பதிவுகளும் வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் 1989ல் நடந்த மக்கள் போராட்டத்திற்குப் பின் நடந்த பெரும் போராட்டமாக உள்ளது.

சீனா அரசு சார்பாக இயங்கி வரும் அமைப்புகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பல ஆயிரம் போலி கணக்குகள் பல மாதங்களாக செயற்படாமல் இருந்த நிலையில் தற்போது மக்கள் போராட்டம் வெடித்த பின்பு இந்தப் போலி கணக்கில் இருந்து எஸ்கார்ட் சேவை, பாலியல் சேவைகள் வழங்குவது குறித்து ஊர், இடம் பெயருடன் இந்தச் சீன மொழி கணக்கில் இருந்து பதிவாகியுள்ளது தெரிய வந்துள்ளது.

இதனால் சீன மக்களோ அல்லது உலக நாடுகளில் இருந்து போராட்டம் குறித்தோ அல்லது போராட்டம் நடக்கும் பகுதியை தேடினால் போராட்டத்தைத் தவிரத் தேவையில்லாத பதிவுகள் தான் அதிகமாக வருகிறது என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த மோசமான நடவடிக்கை மூலம் சீனா அரசு போராட்டம் குறித்த பதிவுகளைச் சென்சார் செய்து பாலியல் பதிவுகள் மூலம் திசை திருப்பியுள்ளது.

சீனா அரசு பல முறை இதுபோன்று செய்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஹேஷ்டேக்-ஐ தடை செய்வது, குறிப்பிட்ட வார்த்தையைக் கொண்டு பதிவிட முடியாமல் செய்வது போன்றவற்றை சீனா வழக்கமாகக் கொண்டு உள்ளது.

உதாரணமாகச் சீனா அரசு தனது உள்நாட்டு சமூக வலைத்தளத்தில் Liangma River, Urumqi Road ஆகியவற்றைச் சென்சார் செய்து அதைச் சார்ந்த பதிவுகளைத் தடை செய்துள்ளது. சீனாவில் தற்போது பெரிய அளவில் மக்கள் போராட்டம் நடக்கும் இடம் இது தான்.