கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் வகுப்பறையை மூடி மாணவன் மீது ஆசிரியை ஒருவர் தாக்குதல் நடாத்தியுள்ளதை அடுத்து மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

குறித்த சம்பவம் நேற்று இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் செல்வச்சந்திரன் கலைச்செல்வன் என்ற மாணவனே இவ்வாறு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

தரம் 8 இல் கல்வி கற்கும் குறித்த மாணவன், ஆரம்ப பிரிவிற்கு நண்பர்களுடன் சென்று திரும்பியுள்ளார். இந்த நிலையில், ஆரம்ப பிரிவு ஆசிரியை அழைத்து வகுப்பறை ஒன்றில் அடைத்து அகப்பையினால் குறித்த மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் குறித்த மாணவன் மயக்க முற்றுள்ளான். பின்னர் கூட சென்ற மாணவர்கள் கதவை உதைத்து உட்சென்று குறித்த மாணவனை மீட்டதுடன், ஆசிரியையை அங்கு அடைத்துவிட்டு முதலுதவி செய்ததுடன் பாடசாலை அதிபருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் குடும்பத்தாருக்கு தகவல் வழங்கப்படவில்லை எனவும், மாணவன் சிகிச்சைக்குட்படுத்தாமல் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தந்தையை இழந்த குறித்த சிறுவனின் தாயார் வேலைக்கு சென்று வீடு திரும்பிய போது வீட்டில் சுகவீனமடைந்த மகனை அவதானித்து வினவியுள்ளார்.

காயங்களையும் அவதானித்த தாயார் குறித்த சிறுவனை அழைத்துக் கொண்டு பாடசாலை முதல்வரை சந்தித்து முறையிட்டுள்ளார்.

இதன்போது, குறித்த ஆசிரியருக்கு மனநல குறைவு காணப்படுவதாகவும், அதனால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த நிலையில் தனது மகனை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலை சமூகம் அக்கறை கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவினர்கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் குடும்பத்தாருக்கு தகவல் வழங்கவில்லை என்பதுடன், சிகிச்சையும் வழங்க அனுமதிக்கப்படாமை தொடர்பிலும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அறையை பூட்டி தாக்கிய ஆசிரியை, கூரிய ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் மேற்கொண்டிருப்பின் நிலைமை மோசமாகியிருக்கும், அவ்வாறான ஆசிரியரை கடமைக்கமர்த்தியமை தொடர்பிலும் விசனம் வெளியிடுகின்றனர்.