கிணத்த காணோம் எனும் வடிவேல் காமெடி போல இங்கு நபர் ஒருவர் டிவியில் இன்சை காணோம் என வினோதமான புகாரை அளித்துள்ளார்.

சமீபத்தில் சாம்சங் நிறுவனத்தின் 8 சீரிஸ் TU8000 50 இன்ச் டிவியை ஆன்லைனில் வாங்கிய வாடிக்கையாளர் டெலிவரி செய்யப்பட்ட அந்த டிவியை அளந்து பார்க்கும் பொழுது 44 இன்ச் தான் இருந்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.

 அதுமட்டுமில்லாமல் டிவி பேக் செய்யப்பட்டு வந்த பெட்டியின் அளவும் 49 இன்ச் தான் இருந்திருக்கிறது. எனவே நான் ஏமாந்து போயிருக்கிறேன் என்று ஒரு நபர் பதிவு செய்த ஃபீட்பேக்கின் ஸ்கிரீன்ஷாட் இணையம் முழுவதும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

சாம்சங் நிறுவனம் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் போலியாக விளம்பரப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.தனக்கு டெலிவரி செய்யப்பட்டது 50 இன்ச் டிவி இல்லை என்பதை உறுதி செய்வதற்கு அவர் அந்த டிவியை அளந்து பார்க்கும் ஒரு புகைப்படத்தையும் சேர்த்திருக்கிறார்.

‘50 இன்ச் டிவி ஆர்டர் செய்தேன், ஆனால் 44 இன்ச் டிவி தான் வந்திருக்கிறது. இந்த நிறுவனம் என்னை ஏமாற்றி இருக்கிறது’ என்று அந்த புகாருக்கு 642 யூசர்கள் பயனுள்ளதாக இருக்கிறது என்று லைக் செய்திருக்கிறார்கள்.

சரி உண்மையில் நடந்தது என்ன.?  வாடிக்கையாளர் பதிவேற்றிய அந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது அவர் டிவியை சரியான முறையில் அளவிடவில்லை என்பது தெரிகிறது.

வாடிக்கையாளர், டிவியின் நீளத்தை அளக்கும் போது, ஸ்க்ரீனின் அகலத்தை நேராக அளந்திருக்கிறார். ஆனால், உண்மையில் குறுக்கு வாட்டில் அளக்க வேண்டும். எனவே, குறுக்காக (diagonal measurement) அளவிடும் போது, அவர் வாங்கிய டிவியின் இன்ச் சரியாகத் தான் இருக்கிறது என்றும், சாம்சங் நிறுவனம் அவரை ஏமாற்றவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த வாடிக்கையாளரின் புகாருக்கு பலரும் ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்தும் வந்துள்ளனர்.