ஆக்லாந்தில் Dairy Shop இல் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதை அடுத்து நாடும் முழுவதும் உள்ள Dairy Shop உரிமையாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

34 வயதான ஜனக் படேல் என்ற குறித்த நபர் புதன்கிழமை இரவு அவர் வேலை செய்து கொண்டிருந்த Sandringham இல் உள்ள ரோஸ் காட்டேஜ் சூப்பரெட் Dairy Shop இற்கு வெளியே ஒரு கொள்ளையனை எதிர்கொண்டபோது கத்தியால் குத்தப்பட்டார்.

இந்நிலையில், ஜனக் பட்டேலின் மறைவையடுத்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக Dairy Shop உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

Sandringham வர்த்தக சங்கத் தலைவர் Jithin Chittibomma கூறுகையில்...

"பாதுகாப்புக்கான வணிக உரிமையாளர்களின் வேண்டுகோளை அரசாங்கம் செவிமடுத்திருந்தால், படேலின் மரணத்தைத் தவிர்த்திருக்கலாம்"

"சில வாரங்களுக்கு முன்பு நானே சொன்னேன், இது யாரோ ஒருவரின் மரணத்தில் முடிவடையும் என்று" இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் பட்டேலின் இறுதிச்சடங்கு முடிந்ததும் போராட்டம் நடத்தப்படும் என்று Dairy and Business சங்கத் தலைவர் சன்னி கவுஷல் தெரிவித்தார்.

இறந்தவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் ஆயிரக்கணக்கான Dairy Shop கள் மற்றும் சிறு வணிக நிலையங்கள் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் மூடப்படும் என்று அவர் கூறினார்.

சிறு வணிகர்கள் அரசாங்கத்திடம் இருந்து அனுதாபத்தை விட தக்க நடவடிக்கையை விரும்புகிறார்கள் என்று அவர் கூறினார்.

இந்நிலையில் பிரேத பரிசோதனை இன்று நடைபெறுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே தகவல் அளித்தவர்களுக்கு காவல்துறை நன்றி தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்தில் சுற்றிவளைப்புகள் உள்ளன, இன்று அல்லது நாளை அவை நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கோப்பு எண் 221123/3847 ஐ மேற்கோள் காட்டி தகவல்களை வழங்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.