குரங்கம்மை நோயின் பெயரை 'MPOX' என்று மாற்றிட உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு நோயின் பெயரை மாற்றுவது அவ்வளவு முக்கியமா என்று நினைக்கலாம். குரங்கம்மையின் பெயர் மாற்றப்படுவதன் பின்னணி மிகவும் நீளமானது.

குரங்கு அம்மை நோயின் பெயர் இனவெறியைத் தூண்டுவதாகவும், பாரபட்சமாக இருப்பதாகவும் பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வந்தன. அதாவது வைரஸ் பரவல் மூலம் ஏற்படும் நோய்களுக்கு புவியியல் ரீதியாக பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்டகாலமாக இருந்து வந்தன.

எனவே, குரங்கம்மை நோய் மற்றும் வைரஸ்களுக்கு புதிய பெயர் சூட்ட முடிவு செய்த உலக சுகாதார அமைப்பு, அதற்காக பொதுமக்களிடமிருந்து பரிந்துரைகள் கோரியிருந்தது.

மேலும் குரங்கு அம்மையின் பிறழ்வுகளுக்கு (varaint Names) புதிய பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் இந்த பெயர் மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

கடந்த பல மாதங்களாக, அமெரிக்க அரசு நிர்வாகம்‌ Monkeypox என்ற பெயர், இனரீதியில் இருப்பதாக தெரிவித்து வந்தது.

அதிலும், குறிப்பாக நிற அடிப்படையில் மக்கள் மத்தியில், தடுப்பூசி பிரச்சாரத்தை மெதுவாக்கி இருப்பதாக தெரிவித்து வந்தது.  

எனவே, பல தரப்பு கருத்துகளையும் பரிசீலித்த உலக சுகாதார நிறுவனம், Monkeypox என்பதற்கு பதிலாக "MPOX" என மறுபெயரிட திட்டமிட்டுள்ளது என்று, இந்த விடயத்தில் நன்கு அறிந்தவர்களை மேற்கோள் காட்டி பொலிட்டிகோ செய்தி வெளியிட்டிருக்கிறது. 

இது தொடர்பான முடிவு வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று அமெரிக்க செய்தி நிறுவனம் பொலிட்டிகோ தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் பதிவாகியிருந்த வைரஸ் நோய்க்கு Monkeypox என்று பெயர் வைக்கப்பட்டது.

இனிமேல் இந்த வைரஸ் MPOX என்று அறியப்படும் என கூறப்படுகிறது.