ரஷ்ய‌ அதிபர் புடினின் மகள்களான மரியா விளாடிமிரோவ்னா வொரொன்ட்சோவா மற்றும் கேடரினா விளாடிமிரோவ்னா டிகோனோவா ஆகியோரைக் குறிவைத்து, ரஷ்யாவுக்கு எதிராக மேலும் பல பொருளாதாரத் தடைகளை நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர் நனாயா மஹுதா அறிவித்துள்ளார்.

ரஷ்யா மற்றும் பெலாரஸ் அரசாங்கங்களின் உள் வட்ட உறுப்பினர்களுக்கும் இந்த தடைகள் பொருந்தும் என்று மஹுதா கூறினார்.

அரசியல் மற்றும் பொருளாதார உயரடுக்கின் உறுப்பினர்களாக, இந்த நபர்கள் உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை செயல்படுத்துகிறார்கள். 

இந்தப் போரைத் தூண்டும் புடின் மற்றும் பிற தலைவர்கள் மீது அழுத்தத்தைக் கொண்டு வர மோதலை எளிதாக்குபவர்களுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது சொத்துக்கள் அல்லது சேவைகள், பங்குகள் அல்லது பத்திரங்களைக் கையாள்வதற்கான தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் நியூசிலாந்துக்குள் நுழையும் ரஷ்ய சொகுசு கப்பல்கள் அல்லது விமானங்கள் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் பயணம் செய்ய வேண்டாம் என்று நியூசிலாந்து நாட்டவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து நினைவூட்டுகிறோம் என்று மஹுதா கூறினார்.

இதுவரை நியூசிலாந்து 1200 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.